search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புழல் மத்திய சிறை"

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சென்னை புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 கைதிகள் இன்று விடுதலையானார்கள். #MGRCentenary
    செங்குன்றம்:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதல் கட்டமாக 67 கைதிகள் விடு விக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.

    அதன்படி கடந்த 6-ந்தேதி சென்னை புழல் சிறைச்சாலையில் இருந்து 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சென்னை புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 கைதிகளும், திருச்சி மத்திய சிறையில் இருந்து 10 பேரும், சேலம் சிறையில் இருந்து 4 பேரும், பாளையங்கோட்டை சிறையில் இருந்து 2 பேரும் என மொத்தம் 68 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    புழல் சிறையில் இருந்து இன்று காலை 11.10 மணிக்கு 52 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை சிறைத்துறை டி.ஜி.பி. அசுதோஸ் சுக்லா, டி.ஐ.ஜி. முருகேசன், சூப்பிரண்டு ருக்குமணி பிரியதர்ஷினி ஆகியோர் வழி அனுப்பி வைத்தனர். விடுதலையான கைதிகள் சுயதொழில் செய்வதற்கான உபகரணங்களை போலீசார் வழங்கினார்கள்.

    கைதிகளை வரவேற்க அவர்களது உறவினர்கள் சிறை வாசலில் காத்திருந்தனர். அவர்களை கட்டி தழுவி கண்ணீர் மல்க வரவேற்று அழைத்து சென்றனர்.


    திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டு காலம் நிறைவு பெற்ற 10 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம், எஸ்.பி., நிகிலா நாகேந்திரன் ஆகியோர் பல்வேறு அறிவுரைகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். 10 பேரையும் அழைத்து செல்ல அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறை முன்பு குவிந்திருந்தனர். பின்னர் அவர்களை கட்டித்தழுவி மகிழ்ச்சியுடன் அழைத்து சென்றனர்.

    இதேபோல் சேலம் சிறையில் 4 கைதிகளும், பாளையங்கோட்டையில் 2 கைதிகளும் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர். #MGRCentenary
    ×